
திருமணம் நடக்க இருந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை
நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், காதலித்த வாலிபர் மிரட்டியதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை கோடியூர் பகுதியை சேர்ந்த விநாயகம் அலமேலு தம்பதியின் மகள் ஸ்ரீ தர்ஷினி (20 வயது), கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார். இவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் பேசி முடித்திருந்தனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு மங்குண்டு பெருமாள் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில், மாணவியை காதலித்ததாக கூறப்படும் வாலிபர் ஒருவர், மாணவிக்கு திருமணம் நடக்க இருந்ததை அறிந்ததும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.



































