அரியலூர் நகரில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோவில் வரலாற்று சிறப்புமிக்கதாகும். தமிழகத்திலேயே ஆறடி உயரம் உள்ள பெருமாளின் தசாவதார சிற்பங்கள் உள்ள ஒரே கோவில் இதுவாகும். சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் தேரோட்டம் 1942 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெறவில்லை. இத்திருத்தேர் வெள்ளோட்டம் 83 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது.
15 அடி அகலம், 15 அடி உயரம், 15 டன் எடையுள்ள புதிய திருத்தேரில் பெருமாளின் அவதாரங்கள், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர் உள்ளிட்ட கடவுள்களின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டு அழகுற திருத்தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருத்தேர் வெள்ளோட்டத்தையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
பின்னர் போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் கோவிலில் இருந்து பூஜை செய்யப்பட்ட கலசம் அருள்மிகு நவநீதகிருஷ்ணர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து புதிய தேரில் கலசம் பொருத்தப்பட்டு, வெள்ளோட்டம் தொடங்கியது. அமைச்சர் சிவசங்கர் தேரை வடம் பிடித்து வெள்ளோட்டத்தை துவக்கிவைத்தார். இதனையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.