பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் இரண்டு சிறுவர்கள் நேற்று முன்தினம்(செப்.12) பள்ளிக்கு லீவு போட்டு விட்டு, வீட்டிலிருந்து கிளம்பி பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்து வரும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை பார்த்துள்ளனர். பின்னர், மாலையில் மைதானத்திற்கு வெளியே அவர்கள் நின்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் கிராமத்தில் அறை எடுத்து தங்கி உள்ள கிருஷ்ணகுமார் (52) என்பவர் வந்துள்ளார். தனியாக நின்று கொண்டிருந்த இரண்டு மாணவர்களையும் பார்த்த கிருஷ்ணகுமார், உங்களுக்கு இலவசமாக டியூசன் நடத்துகிறேன். என்னுடன் வாருங்கள் என்று கூறி 2 சிறுவர்களையும் தனது டூவீலரில் ஏற்றிக்கொண்டு கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள தனது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார்.
அப்போது சிறுவர்கள் சத்தம் போடவே பொதுமக்கள் ஓடி வந்து கதவை தட்டித் திறந்து சிறுவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கிருஷ்ணகுமாரை தாக்கியுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 சிறுவர்களையும் மீட்டனர். இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கிருஷ்ணகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.