பொங்கல் பண்டிகையை மக்கள் சிரமமின்றி கொண்டாட சொந்த ஊருக்கு பயணிக்கும் வகையில் 44,580 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுவதாக,
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சிரமமின்றி பயணிக்க 21,904 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் பொங்கலை கொண்டாடி விட்டு திரும்பும் மக்களின் வசதிக்காக 22,676 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. ஜன.10 முதல் 13-ம் தேதி வரை சென்னையிலிருந்து வெளிஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக வழக்கமாக தினமும் இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நான்கு நாட்களும் சேர்த்து 14,104 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் பிற ஊர்களிலிருந்து ஜன.10 முதல் 13-ம் தேதி வரை 7,800 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 21,904 பேருந்துகள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இயக்கப்பட்டு வருகின்றன.
முன்பதிவு மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். மேலும், டிஎன்எஸ்டிசி செயலி மூலமும் www.tnstc.in எனும் இணையதளம் மூலமாகவும் பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.