மக்களிடம் மனு வாங்கி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதுதான் ஓர் ஆட்சியின் கடமை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவராக, தமிழகம் முழுவதும் பெரிய பெரிய பெட்டிகளை வைத்து மனுக்களை வாங்கி, பூட்டி சாவிகளை தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார் ஸ்டாலின்.
இன்றுவரை அந்தப் பெட்டிகள் திறக்கப்பட்டதா, எத்தனை லட்சம் மனுக்கள் பெறப்பட்டன? அந்தக் கோரிக்கைகள் உண்மையாக தீர்க்கப்பட்டனவா? அல்லது ஒப்புகைச் சீட்டு மட்டும் வழங்கப்பட்டதா என்று நான் பலமுறை எழுப்பிய கேள்விகளுக்கு உண்மையான புள்ளி விவரங்களை இந்த ஆட்சியாளர்கள் இதுவரை வெளியிடவில்லை. அந்தப் பெட்டிகளின் சாவிகளை ஸ்டாலின் தொலைத்துவிட்டாரோ என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள். அன்று மனு கொடுத்தவர்களிடம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை வழங்கிய ஸ்டாலின், அதை எடுத்துக்கொண்டு நேரடியாக கோட்டைக்கு வந்து என்னை முதல்வர் அறையிலேயே சந்திக்கலாம் என்று பசப்பு வார்த்தை பேசினார். தற்போது பொதுத் தேர்தல் நெருங்கி வருவதை மனதில்கொண்டு, மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றும் நோக்கத்தில், வரும் நாட்களில் 'இல்லந்தோறும் நேரில் சென்று கோரிக்கை மனுக்களைப் பெறும் திட்டமிட்ட நாடகத்தை' அரங்கேற்ற உள்ளதாகத் தெரிய வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.