சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு டிச.15ல் தேர்தல்: நீதிபதி

84பார்த்தது
சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு டிச.15ல் தேர்தல்: நீதிபதி
சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு டிசம்பர் 15-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், அதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 30-ம் தேதி தொடங்கும் என்றும் தேர்தல் அதிகாரி நீதிபதி வீ. பாரதிதாசன் அறிவித்தார். 52 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு (பிரஸ் கிளப்) பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், விரைவில் தேர்தலை நடத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதனையடுத்து, பத்திரிகையாளர் மன்றத்துக்கு தேர்தல் நடத்துவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வீ. பாரதிதாசன் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் அதிகாரி நீதிபதி பாரதிதாசன் நேற்று மாலை வெளியிட்டார்.

 அப்போது அவர் கூறியதாவது, இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 7-ம் தேதி முடிவடையும். வேட்பு மனுக்கள் டிசம்பர் 9-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பரிசீலிக்கப்படும். டிசம்பர் 10-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். டிசம்பர் 15-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி