உலக அளவில் அதானி போர்ட்ஸின் கடன் பத்திரங்களை எல்ஐசி நிறுவனம் வாங்கியுள்ளது ஏன்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரருமான கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி போர்ட்ஸ் நிறுவனம் வெளியிடும் ரூ. 5,000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை முழுவதுமாக எல்ஐசி நிறுவனம் வாங்கியுள்ளது.
அதானி போர்ட்ஸின் சொத்து மதிப்பில் 88 சதவீதம் கடன்களாலானது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தற்போதைய கடன் சுமை ரூ. 36,422 கோடியாக உள்ளது. இதில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த, அரசு பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியிடமிருந்து, கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 5,000 கோடியை திரட்டியுள்ளது.
உலக அளவில் அதானி போர்ட்ஸின் கடன் பத்திரங்களை வாங்க எந்த ஒரு முதலீட்டு நிறுவனமோ, நிதி நிறுவனமோ தயாராக இல்லாத நிலையில், மத்திய அரசுக்கு சொந்தமான எல்ஐசி நிறுவனம் இந்த கடன் பத்திரங்களை முழுவதுமாக வாங்கியுள்ளது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பணத்தை பொறுப்பற்ற முறையில், பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும், சர்ச்சைக்குரிய ஒரு நிறுவனத்துக்கு வாரி வழங்கியுள்ள மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றேன் என்று அவர் கூறியுள்ளார்.