சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உட்பட 12 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக்குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் பி. சண்முகம், உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்கெனவே குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 12 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.