டெல்லியின் 'மதராசி கேம்ப்' குடியிருப்பாளர்களில் உள்ள தமிழர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மதராசி கேம்ப்' என்பது தெற்கு டெல்லி, நிஜாமுதீன் ரயில்வே நிலையத்துக்கு அருகிலுள்ள பராப்புல்லா ஜங்க்புரா வடிகாலின் கரையில் அமைந்துள்ள ஓரங்கட்டப்பட்ட குடிசைப் பகுதியாகும்.
"மதராசி கேம்ப்" குடியிருப்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சட்ட வழக்குகளும் டெல்லி உயர் நீதிமன்றத்தால் மே 9-ம் தேதியிட்ட உத்தரவின் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அந்த உத்தரவின்படி, ஜூன் 1-ம் தேதி முதல் 'மதராசி கேம்ப்' பகுதிகளில் இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் வழிநடத்தலின் கீழ், 'மதராசி கேம்ப்' குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு தமிழக அரசு உதவிக் கரம் நீட்டும். வாழ்வாதாரம் மற்றும் தேவையான பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படும். இந்த உதவிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகம் மூலம் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.