அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி இரவு, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதனையடுத்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடம்பெற்ற சிறப்பு குழு அமைக்கப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையை முடித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த மே 28ம் தேதி ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.