சென்னை: அமலாக்கத்துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி

59பார்த்தது
சென்னை: அமலாக்கத்துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி
அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் என். ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத்துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் என். ரவிச்சந்திரன் இயக்குனராக உள்ள 'TRUEDOM EPC INDIA' நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து, 30 கோடி ரூபாய் கடன் பெற்றது. அந்த கடன் தொகையை 'TRUEDOM EPC INDIA' நிறுவனம் சகோதர நிறுவனங்களுக்கு மாற்றிவிட்டதாகவும், இதன் மூலம் தங்களுக்கு 22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வங்கி சார்பில் புகாரளிக்கப்பட்டது. 

இதனடிப்படையில் கே.என். நேருவின் சகோதரர் என். ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது 2021-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் தான் அண்மையில் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் என். ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 

இந்த மனு நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து, விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்தி