தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள் என குவாரி விதிமீறல் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில், புரவிபாளையம் கிராமத்தில் கே.டி. செந்தாமரை என்பவர் பட்டா நிலங்களில் 2009-ம் ஆண்டு முதல் குவாரிகளை நடத்தி வருகிறார். இவரது குவாரிகளில் விதிமீறல் உள்ளது என ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி விசாரித்தார்.
அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டமே, நேர்மையற்ற பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காப்பாற்றுவதற்காகத்தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், தீராத பேராசைக்காரர்களான குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர். இந்த குவாரி மோசடியில் கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை என்ன பங்கு உள்ளது? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை மூலம் தமிழ அரசு விசாரணை நடத்த வேண்டும். பின்னர், அவர்கள் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது குற்றவியல் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.