ஒரு மாத கோடை விடுமுறைக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றம் தனது அன்றாடப் பணிகளை இன்று முதல் தொடங்குகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக கர்நாடகாவில் இருந்து வந்துள்ள ஹேமந்த் சந்தன் கவுடர் இன்று பொறுப்பேற்கவுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு கடந்த மே 1-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில், இன்று முதல் உயர்நீதிமன்றம் தனது அன்றாடப் பணிகளை தொடங்கவுள்ளது. கோடை விடுமுறையில் அவசர வழக்குகளை விசாரிக்க பிரத்யேக அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இந்நிலையில் ஜூன் 2-ம் தேதியான இன்று முதல் உயர் நீதிமன்றம் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து மாறுதலாகி வரும் நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் நாளை காலை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் முன்னிலையில் பொறுப்பேற்கவுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் பணியிடங்கள் மொத்தம் 75 ஆக உள்ள நிலையில், தற்போது 59 நீதிபதிகள் பணியில் உள்ளனர். நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் பதவியேற்றால் இந்த எண்ணிக்கை 60 ஆக உயரும். தவிர இந்த மாதத்தில் மேலும் 2 நீதிபதிகள் பணிஓய்வு பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.