பெரம்பூர்: சென்னை கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். மருத்துவமனை ஆய்வகங்கள், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வார்டுகளுக்கும் சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா உள்பட பலர் இருந்தனர். இதன்பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள பெரியார் மருத்துவமனை முதலமைச்சர் திறந்துவைத்த மறுதினமே மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
பொதுப்பணித்துறை சார்பாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழைய கட்டிடத்தில் 300 படுக்கைகள் உள்ளன. மொத்தமாக 870 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. புதிய மருத்துவமனையில் 25க்கும் மேற்பட்ட மருத்துவ துறைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு நாளில் 125க்கும் மேற்பட்ட நோயாளிகள் மார்பக பிரச்னைகளுக்காக வருகின்றனர். இந்த மருத்துவமனையில் 639 பேர் பணியாற்றி வருகின்றனர். சிறப்பு அம்சமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரே ஆபரேஷன் தியேட்டரில் கிட்னி எடுப்பது, கிட்னி பொருத்துவது என இரண்டுக்கும் ஒரே ஆபரேஷன் தியேட்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை கார்ப்பரேட் அலுவலகத்தை மிஞ்சும் அளவுக்கு சுத்தமாக உள்ளது என்றார்.