சென்னை: அரசு கலை கல்லூரி: இன்று பொது கலந்தாய்வு தொடக்கம்

60பார்த்தது
சென்னை: அரசு கலை கல்லூரி: இன்று பொது கலந்தாய்வு தொடக்கம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைந்தது. ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 762 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி ஆன்லைன் விண்ணப்பப் பதிவு முழுமை செய்திருந்தனர். 

சிறப்புப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் மே 29ம் தேதியும், தொடர்ந்து, பொதுப்பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் மே 30ம் தேதியும் வெளியிடப்பட்டன. தரவரிசைப் பட்டியல்கள் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டதுடன், ஒவ்வொரு அரசு கலை அறிவியல் கல்லூரித் தகவல் பலகையிலும் ஒட்டப்பட்டன. பிடித்தமான பாடப்பிரிவைத் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு சிறப்புப் பிரிவினருக்கு ஜூன் 2 மற்றும் 3ம் தேதிகளிலும், தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 4 முதல் 14ம் தேதி வரையும் நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்டமாக சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் தொடங்கி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. 

இதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி வருகிற 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முடிந்து தொடர்ந்து 2ம் கட்ட விண்ணப்பப் பதிவும் நடந்து வருகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 30ம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.