சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, இன்று முதல் 18ஆம் தேதி வரை இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 10 மற்றும் 11வது நடைமேடைகளில் இயக்கப்பட வேண்டிய புறநகர் மின்சார ரயில்கள் 5 மற்றும் 6வது நடைமேடைகளில் இயக்கப்படும். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு செல்லும் ரயில்கள் 6-வது நடைமேடையிலும், மறுமார்க்கமாக செல்லும் ரெயில்கள் 5வது நடைமேடையிலும் இயக்கப்படும். இதனால் சில மின்சார ரயில் சேவைகள் பகுதிநேரமாகவும், முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இன்று முதல் 18ஆம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் சில ரயில்களும், கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வரும் சில ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இன்று மற்றும் 15ஆம் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்தும், தாம்பரத்தில் இருந்தும் புறப்படும் சில மின்சார ரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.