தனியார் பள்ளி நிர்வாகங்களோடு பேசி 25 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் படி ஏழை, எளிய மாணவர்களுக்கான 25 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தர வேண்டிய தொகை நிலுவையாக உள்ளது. இவ்வாண்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 1. 75 லட்சம் மாணவர்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி விண்ணப்பம் செய்துள்ளனர்.
சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு தரவேண்டிய ரூபாய் 2152 கோடி நிதி பங்கீட்டை ஒன்றிய அரசு கொடுக்க மறுத்து வருகிறது. ஒன்றிய அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தையே முடமாக்கும் வகையில் இச்சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியையும் மாநிலங்களுக்கு வழங்காமல் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனில் ஒன்றிய பாஜக அரசு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒன்றிய அரசிடமிருந்து நிதியை பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளும் அதேநேரத்தில், தனியார் கல்வி நிறுவனங்களுடன் பேசி கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர்கள் சேர்க்கைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.