அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அந்த வீடியோவுக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். அதில் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளதாவது, எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது.
என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும்.என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது.தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.