சென்னை: கலை கல்லூரிகளில் பொது கலந்தாய்வு இன்றுடன் நிறைவு

75பார்த்தது
சென்னை: கலை கல்லூரிகளில் பொது கலந்தாய்வு இன்றுடன் நிறைவு
தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7 முதல் 27ம் தேதி வரை நடந்தது. மொத்தம் ஒரு லட்சத்து 84 ஆயிரம் மாணவர்கள், மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். 

இதைத் தொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு முதல்கட்டமாக சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 2 மற்றும் 3ம் தேதி நடந்தது. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஜூன் 4ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. சென்னையில் மாநிலக் கல்லூரி, ராணி மேரி மகளிர் கல்லூரி, அண்ணா சாலை காயிதே மில்லத் மகளிர் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் கூட்டம் அலைமோதியது. இந்த முதல்கட்ட கலந்தாய்வில் வணிகவியல், கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், பொருளாதாரம், கணிதம், புள்ளியியல், உளவியல் ஆகிய படிப்புகளுக்கான இடங்கள் நிரம்பிவிட்டன. 

சென்னை மாநிலக் கல்லூரியைப் பொறுத்தவரை 80 சதவீத இடங்கள் நிரம்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே, அரசு கல்லூரிகளில் சேருவதற்கான 2வது கட்ட விண்ணப்பப் பதிவும் தற்போது நடந்து வருகிறது. ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்களும் துணைத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களும் விண்ணப்பித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி