சென்னை தலைமை செயலகத்தில் நேற்று, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக இளம் அறிவியல் வேளாண் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவுகளை உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் 9ம் தேதி (நேற்று) முதல் 8.6.2025 வரை இணையதளத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 6,971 இடங்கள் இந்த கல்வி ஆண்டில் நிரப்பப்பட உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு, தொழில்முறை கல்வி பாடப்பிரிவினருக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான 5 சதவீத இட ஒதுக்கீடு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு என்று சிறப்பு இட ஒதுக்கீடுகள் பின்பற்றப்பட உள்ளது.
வேளாண்மை தகவல் தொழில்நுட்பம், உயிர் தகவலியல் என்ற இரண்டு புதிய பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 80 மாணவர்கள் இந்த பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட உள்ளனர். ஜூன் 16ம் தேதி கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. வேளாண்மை பல்கலைகழகம் துணைவேந்தர் நியமனம் செய்ய தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.