கள்ளக்குறிச்சியில் இளம்பெண் ஒருவர் கொடிய முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு 7 நாட்களுக்கு மேலாகும் நிலையில், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த திம்மாவரம் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் கொடிய முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப் பட்டிருக்கிறார். இந்தக் கொடூரம் நிகழ்ந்து 7 நாட்களுக்கு மேலாகும் நிலையில், அதற்குக் காரணமான மனித மிருகங்களைக் கைது செய்ய தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் இப்போது நிலவும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இனியும் தொடரக் கூடாது. திம்மவரத்தில் நிர்மலா பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும், இனி வரும் காலங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.