சென்னை: கருணாநிதியின் 179 நூல்கள் நாட்டுடைமை - அரசாணை வழங்கல்

53பார்த்தது
சென்னை: கருணாநிதியின் 179 நூல்கள் நாட்டுடைமை - அரசாணை வழங்கல்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 179 நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கான அரசாணையை, அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் வழங்கினார். 

தமிழக முதல்வராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு இதுவரை 31 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூ. 3.75 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மு. கருணாநிதி நூல்கள் அனைத்தும் நூலுரிமை தொகையின்றி நாட்டுடைமை செய்யப்படும் என அறிவித்தார். அதன்படி, கருணாநிதியின் அனைத்து படைப்புகளையும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான க. ராஜாத்தி அம்மாளிடம், கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கியதற்கான அரசாணையினை அவரது இல்லத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் நேற்று வழங்கினார். 

திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராமன், தமிழ் வளர்ச்சி துறையின் இயக்குநர் ஔவை அருள் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி