ஆலந்தூர் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பழைய பயண அட்டையின் பயன்பாட்டை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டை இன்றுமுதல் முழுமையாக மாற இருப்பதைக் கருத்தில் கொண்டு, ஆலந்தூர் உட்பட பல்வேறு மெட்ரோ ரயில் நிலைய கவுன்டர்களில் பயண அட்டையில் உள்ள மீதித் தொகையைத் திருப்பித் தருமாறு பயணிகள் கேட்டனர். ஆனால், பழைய அட்டையில் உள்ள தொகையை பயணம் மேற்கொண்டு கழிக்குமாறு ஊழியர்கள் பதிலளித்தனர்.
இதனால், பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, "சிங்கார சென்னை அட்டைக்கு மாற பயணிகளை ஊக்கப்படுத்துகிறோம். இந்த பயண அட்டையில் தொகை பூஜ்ஜியம் நிலைக்கு வந்தபிறகு, அவர்களுக்கு ரீசார்ஜ் செய்யாமல், அதற்கு பதிலாக சிங்கார சென்னை அட்டை வழங்கப்படுகிறது.
மேலும், மெட்ரோ ரயில் பயண அட்டையை நிறுத்தி வைக்கவில்லை. மாறாக, படிப்படியாக மாற்ற திட்டமிட்டு உள்ளோம். எனவே, பழைய பயண அட்டையில் இருந்து சிங்கார சென்னை அட்டைக்கு மாற, மேலும் 2 மாதங்கள் வரை கால நீட்டிப்பு செய்யப்படும்" என்றனர்.