தமிழை வளர்க்க பள்ளி இறுதி வகுப்பு வரை பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழை வளர்ப்பதற்கோ, மொழிக் கொள்கையில் உறுதியைக் காட்டுவதற்கோ 'ரூ' போடத் தேவையில்லை.
மாறாக அன்னைத் தமிழை வளர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழை எட்டாம் வகுப்பு வரையிலாவது பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 1999-ல் சென்னையில் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டனர். அவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி தமிழை பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்றத் தவறிய அன்றைய திமுக அரசு, அதற்கு பதிலாக 5-ம் வகுப்பு வரை மட்டும் தமிழை பயிற்று மொழியாக்கி அரசாணை பிறப்பித்தது.
தமிழை பயிற்று மொழியாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய திமுக அரசு 2006-ல் முதன் முதலில் சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தி தமிழுக்கு துரோகம் செய்தது. இன்று வரை அதன் தமிழ்த் துரோகம் தொடர்கிறது. பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழைப் பயிற்று மொழியாக்க நடப்புச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்டம் இயற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.