தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 17 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சைதாப்பேட்டை சின்னமலையைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் பெரும் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலைத் தாங்க முடியாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆகாஷை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகாஷ் பல மாதங்களாகவே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி இருந்துள்ளார். அவருக்கு வேலை கிடைக்காத நிலையில், ஆன்லைன் ரம்மி ஆடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
மேலும் பணம் ஈட்ட வேண்டும் என்ற ஆசையில் தம்மிடம் இருந்த பணத்தையும், கடன் வாங்கிய பணத்தையும் தொலைத்துள்ளார். கடைசியாக தமது தாயாரின் மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த ரூ. 30 ஆயிரம் பணத்தையும் எடுத்து ஆன்லைன் ரம்மி ஆடி இழந்துள்ளார். தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.