வடகாடு கிராமத்தில் குடிபோதையில் இருந்த சிலரால் ஏற்பட்ட சம்பவம் சமூக மோதலாக சித்தரிக்கப்பட்டு, வதந்திகளும் பரப்பப்பட்டுள்ளன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள வடகாடு கிராமத்தில் கடந்த மே 5ம் தேதி, சமூகப் பொறுப்பற்ற சிலர், தங்களது இருசக்கர வாகனங்களுக்கு யார் முதலில் பெட்ரோல் போடுவது என்ற முனைப்பில், குடிபோதையில் செய்துகொண்ட தகராறு வன்மையாகக் கண்டிக்கதக்கது. இந்த தகராறு நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் வாய்மூடி மவுனசாட்சியாக நின்றுஇருந்தனர் என்பது வெட்கப்படவேண்டிய செயலாகும்.
இந்த சம்பவத்தில் முற்றிலும் எரிந்துபோன வீட்டை புதுப்பித்து, அரசு செலவில் கட்டிக்கொடுக்க வேண்டும். வீடுகள், வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதாரத்திற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி இழப்பீடு வழங்க வேண்டும். குடிபோதையில் தகராறு செய்வதில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குபதிவு செய்து, அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டனை பெற்றுதர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.