பொங்கல் பரிசுத் தொகுப்புடன், குடும்பத்துக்கு தலா ரூ. 1000 வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வரும் 2025 தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாளில் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு கொண்ட பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
வழக்கமாக வழங்கப்படும் ரொக்கத் தொகை குறித்து எப்போது அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படி பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அரசு பொங்கல் திருநாளில் பரிசுத் தொகுப்புடன் மட்டுமே நிறுத்திக் கொள்வது ரொக்கத் தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, நிதியமைச்சரின் முடிவின் மீது முதலமைச்சர் தலையிட்டு மறுபரிசீலனை செய்து, பொங்கல் திருநாளில் வழங்கப்படும் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை குடும்பத்திற்கு தலா ரூ. 1000 வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.