உலகத் தண்ணீர் நாள் மார்ச் 22 ஆம் தேதியன்று கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழக சதுப்பு நிலங்களை அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உலகத் தண்ணீர் நாள் மார்ச் 22 ஆம் தேதியன்று கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களான சதுப்பு நிலங்களை அறிவிக்க செய்து பாதுகாக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. நீர்வளங்களைக் காப்பதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
இஸ்ரோ சதுப்புநில வரைபடம் 2021 பட்டியலில் உள்ள 2.25 எக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட தமிழகத்தின் 26,883 சதுப்புநிலங்களின் எல்லைகளை மூன்று மாத காலத்திற்குள் வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 11.12.2024 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மார்ச் 22, உலக தண்ணீர் நாளை முன்னிட்டு 29.03.2025 அன்று கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இக்கூட்டத்தின் கருப்பொருளாக 'உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளைப் பற்றி விவாதித்தல்' என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி, அந்தந்த ஊராட்சிகளின் நீர்நிலைகளை 2017 சதுப்புநில விதிகளின் கீழ் அறிவிக்க செய்யக் கோரும் தீர்மானத்தினை அனைத்து கிராமசபையிலும் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.