அதிமுக போன்ற அடிமைத் துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பாஜக முன் மண்டியிட்டாலும், திமுகவின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும். நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது. மத்திய பாஜக அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது.
மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன. 2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மத்திய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும். அதிமுக போன்ற அடிமைத் துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பாஜக முன் மண்டியிட்டாலும், திமுகவின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும். நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.