பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம்

50பார்த்தது
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம்
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், வடகரை கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சவுண்டம்மாள் (54) மற்றும் தண்டியனேந்தலைச் சேர்ந்த கருப்பையா (37) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன். 

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காரியாபட்டியைச் சேர்ந்த கணேசன் (55), முருகன் (40), மாரியம்மாள் (40) மற்றும் பேச்சியம்மாள் (38) ஆகிய நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.