கோவை ரத்தினபுரி காவல் நிலைய எல்லையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், கஞ்சா கடத்திய மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர். ரூட்ஸ் மேம்பாலம் அருகே சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது, அவர்களிடம் இருந்து சுமார் 5.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோஸ்வா தவப்பிரியன் (27), சுவிட்சன் பெர்னாட் (26) மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரணி சௌந்தர் (24) என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் ஆனைக்கட்டியில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சிறு பொட்டலங்களாக விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் போது தப்பிக்க முயன்ற அவர்கள் மேம்பாலத்தின் கீழ் குதித்ததில் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மூவர்மீதும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.