கோவை தடாகம் சாலையில் கணுவாய் அருகே உள்ள நர்சரி பகுதியில் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையின் நடுவே விபத்துக்குள்ளானது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் பெரிய உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. வேனில் இருந்து கீழே விழுந்த சிலிண்டர்களை பொதுமக்கள் உடனடியாக எடுத்து சாலையோரம் வைத்தனர். மேலும், கவிழ்ந்த வேனையும் சாலையோரம் நிமிர்த்தி ஓரமாக நிறுத்தினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்து குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வேனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சிலிண்டர்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மிகுந்த கவனத்துடன் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.