கோவை, வடவள்ளியில் தனியார் பெயிண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் வசந்த் (22) என்பவர், கோவை ஜிவி ரெசிடென்சியைச் சேர்ந்த பாலகுருவின் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் பணியை மேற்கொண்டார். பணி முடிந்த பின், மீதமுள்ள பணத்தை கேட்டபோது, பாலகுருவின் மனைவி மற்றும் மகன் பரத் ஆகியோர் வசந்தை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வசந்த் தனது நிறுவனத்தின் குழுவினருடன் இணைந்து பாலகுருவின் வீட்டிற்கு சென்று பெயிண்டிங் பணிகளை மேற்கொண்டார்.
பணிக்கான மொத்த தொகை 5 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டு, முன்பணமாக 2 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. பணி முடிந்த பின், மீதமுள்ள 3 லட்சம் ரூபாயை வசந்த் கேட்டபோது, பாலகுருவின் மனைவி மற்றும் மகன் பரத் ஆகியோர் வசந்திடம் தகராறு செய்து, தகாத வார்த்தைகளை பேசி, சரமாரியாக அடித்து உதைத்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த வசந்த், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, வசந்த் நேற்று முன்தினம் (டிசம்பர் 30) சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புகாரின் பேரில் பாலகுருவின் மகன் பரத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.