கோவை: வடமாநில வாலிபர் மீது தாக்குதல்

83பார்த்தது
கோவை: வடமாநில வாலிபர் மீது தாக்குதல்
கோவையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தும் போது கை பட்டதால் ஏற்பட்ட தகராறில் வடமாநில வாலிபர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேற்கு வங்க மாநிலம் ஜாதர்ஹதியைச் சேர்ந்த தீப்தாஷ் (19) என்பவர் கோவை ஆர். எஸ். புரம் தியாகிகுமரன் வீதியில் உள்ள ஒரு தங்கப் பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று தீப்தாஷ் தனது மோட்டார் சைக்கிளை அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு எதிரே நிறுத்தியுள்ளார். அப்போது, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் (27) என்பவர் மீது எதிர்பாராத விதமாக தீப்தாஷின் கை பட்டது. 

கை பட்ட விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. இவர்களின் சண்டையை அறிந்த தினேஷின் நண்பரான விக்னேஷ், தீப்தாஷுடன் தகராறில் ஈடுபட்டு இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த தீப்தாஷ் உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இந்தச் சம்பவம் குறித்து ஆர். எஸ். புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் முடிவில், தினேஷ் (27) கைது செய்யப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்ட மற்றொருவரான விக்னேஷை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி