கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் கவிபிரியன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்துவந்த அவர் அடிக்கடி விடுமுறை எடுத்து வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மாணவரின் பெற்றோரிடம் தெரிவித்ததோடு, மாணவரை கண்டித்தும் உள்ளனர். கடந்த மாதம் 5ஆம் தேதி விடுமுறைக்குச் சென்ற மாணவர் மீண்டும் கல்லூரிக்குத் திரும்பவில்லை. பெற்றோர் அறிவுரை கூறி கல்லூரிக்கு அனுப்பி வைத்த நிலையில், மீண்டும் மாணவர் விடுமுறை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
மனமுடைந்து விரக்தியில் இருந்த மாணவர் கவிபிரியன் கல்லூரி விடுதியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கோவை சாவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.