கோவை மாநகர மக்களுக்கு சிறுவாணி, பில்லூர் அணைகள் மற்றும் ஆழியாறு, பவானி ஆறுகளில் இருந்து நீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. பில்லூர் மூன்றாவது திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 70 லட்சம் முதல் 90 லட்சம் லிட்டர் வரை நீர் பெறப்பட்டு வந்தது.
மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பில்லூர் மூன்றாவது திட்டத்தில் நீர் உந்துதல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவை மாநகராட்சி முழுவதும் குடிநீர் வினியோகத்தில் இடையூறு ஏற்படும். சில பகுதிகளில் 24 மணி நேரமும், சில இடங்களில் தினமும், ஒரு நாள் விட்டு ஒரு நாள், சில இடங்களில் இரண்டு நாள், நான்கு நாள் இடைவெளியில் நீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ஒரு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே நீர் வினியோகம் செய்ய வாய்ப்புள்ளது.
எனவே, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். மின்வாரிய பராமரிப்பு பணி 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதுவரை நீர் வினியோகத்தில் இடையூறு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.