கோயம்புத்தூர் மாநகரில் புகையிலை மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது. துடியலூர் பகுதியில் மளிகைக் கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த முருகன் (43) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 43½ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போத்தனூர் அங்கண்ண கவுண்டர் வீதியை சேர்ந்த சாதிக் (25), தெற்கு உக்கடம் மஜித் காலனியை சேர்ந்த முகமது தாரிக் (24) மற்றும் உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சன்பர் ரஹமான் (23) ஆகியோர் பூனேயில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தனர்.
அவர்களை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ரயில் நிலையம் அருகே போதை மாத்திரைகளுடன் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார், நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நேற்று உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் நகல் சிறையில் உள்ள முருகன், சாதிக், முகமது தாரிக், சன்பர் ரஹமான் ஆகியோரிடம் போலீசார் வழங்கினர்.