கோவை டவுன்ஹாலில் உள்ள அருள்மிகு கோட்டை ஈஸ்வரன் திருக்கோவிலில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நைனார் நாகேந்திரன், 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார். தேர்தலில் பாஜக இரட்டை இலக்க எண்ணிக்கையில் எம். எல். ஏ. க்களை பெறும் என நம்பிக்கை வெளியிட்ட அவர், எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார். எடப்பாடி பழனிசாமி முதல்வராகும் பட்சத்தில் அமைச்சர்கள் யார் என்பது தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும் என்றும் கூறினார். தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என தெரிவித்த அவர், கூட்டணியில் இருந்து விலகல் இல்லை; மாறாக அனைவரும் இணைந்து வருவதாகவும், முதலில் அன்புமணி ராமதாஸ் இணைந்துள்ளதாகவும் கூறினார். தை பிறந்தால் வழி பிறக்கும் எனவும் குறிப்பிட்டார். மேலும், முகலாயர் ஆட்சிக்காலத்தில் பல இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டதாகவும், பராசக்தி திரைப்படத்தில் உள்ள தீ பரவட்டும் என்ற வசனத்தை நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.