கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், கிருஷ்ணம்பதிகுளம், செல்வம்பதிகுளம், குமாரசாமி குளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளம், குறிச்சிகுளம் ஆகிய 7 குளங்கள் மேம்படுத்தப்பட்டு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு குளத்தின் கரையிலும் 2.5 கி.மீட்டர் முதல் 5 கி.மீட்டர் வரை நடைபாதை அமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் படகு சவாரி வசதி உள்ளது.
இதுதவிர பெரியகுளத்தின் கரையில் சாகச விளையாட்டு, உணவு கூடங்கள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள், பூங்கா, கழிப்பறை வசதிகள் உள்ளன. வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. தற்போது அங்கு ஆகாயத்தாமரை அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாலாங்குளத்தை இன்று மேயர் ரங்கநாயகி ஆய்வு செய்தார். பின்னர் அவர் பெரியகுளத்தில் படகில் சென்று மிதக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அங்குள்ள சாகச விளையாட்டுகள், பார்வையாளர் மாடம், கற்றல் மையம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். பின்னர் அவர், குளங்களை முறையாக பராமரிக்கவும், ஆகாயத்தாமரைகளை முழுமையாக அகற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து அவர், செல்வசிந்தாமணி குளத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.