கோவை நேரு நகரைச் சேர்ந்த கட்டுமான அதிபர் சென்னிமலை (57) என்பவரிடம் ₹25 கோடி கடன் ஏற்பாடு செய்து தருவதாக கூறி ₹67 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஹரி நாடார் உட்பட 2 பேரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கட்டுமான நிறுவனத்தை விரிவுபடுத்த நிதி தேவைப்பட்டதால் சென்னிமலை, சேலம் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்வாசன் மூலம் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. முதலீட்டாளர்கள் மூலம் கடன் கிடைத்துவிட்டதாக கூறி, வரைவோலை (டி. டி. ) காட்டி நம்ப வைத்து, கமிஷன் மற்றும் ஆவணச் செலவுக்காக ₹67 லட்சம் பெற்றுள்ளனர். பின்னர் பதிவு அலுவலகத்தில் பணம் வழங்குவதாக கூறி ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மற்றொரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரி நாடாரிடம் நடந்த விசாரணையில், இந்த மோசடி சம்பவம் தொடர்பும் தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் ஹரி நாடார் மற்றும் கதிரேசன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, இருவரையும் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.