ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நல்லூரைச் சேர்ந்த நாகராஜன்-விஜயலட்சுமி தம்பதியினரின் மகன் யாதவ் (வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 19-ம் தேதி இரவு 8.45 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் கோவை-பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி அருகே சென்றபோது விபத்தில் சிக்கினார்.
படுகாயம் அடைந்த அவரை உடனடியாக கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, யாதவின் பெற்றோர் நாகராஜன்-விஜயலட்சுமி மற்றும் சகோதரி மோனிஷா ஆகியோர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் யாதவின் கல்லீரல், சிறுநீரகங்கள், தோல் மற்றும் எலும்புகள் தானமாகப் பெறப்பட்டன.
கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கும், தோல் மற்றும் எலும்புகள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. இதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றனர். இதுகுறித்து கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி கூறுகையில், உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்தால் பலரது உயிரை காப்பாற்ற உதவியாக இருக்கும் என்றார்.