கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில், திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் சட்டவிரோதமாக நோட்டீஸ் வழங்குவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டினார். எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார் ஆகியோருடன் கோவை கலெக்டரை சந்தித்த அவர், இந்த செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். வாக்குச்சாவடி அலுவலர்கள் வழங்கும் படிவங்களையே மக்கள் நிரப்ப வேண்டும் என்றும், திமுக முகவர்கள் சட்டவிரோதமாக நோட்டீஸ் வழங்குவதை தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், சில குடும்பங்கள் முழுவதும் பணியில் இருப்பதால் மாலை 6 மணிக்குப் பிறகும் கணக்கெடுப்பு பணியை தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.