கோவை கொடிசியா மைதானத்தில் தி.மு.க கோவை மாநகர் மாணவரணி சார்பில் அகில இந்திய அளவிலான மோட்டார் பந்தயப் போட்டி நேற்று நடைபெற்றது. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 9 மாநிலங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தி.மு.க மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி கூறுகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் போட்டி நடத்தப்பட்டதாகவும், விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு புதிய இளைஞர்களைக் கண்டறிந்து, புது விதமான விளையாட்டுகளை அறிமுகப்படுத்தி, விளையாட்டின் தலைநகரமாக மாறி வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து 10 நாட்கள் கோவை மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறினார்.