கோவை மத்திய சிறையில் கைதிகளைச் சந்திக்க வரும் பார்வையாளர்கள் இனி சாலை ஓரத்தில் காத்திருக்க வேண்டியதில்லை. மாநகராட்சி சார்பில் சிறை வளாகத்தின் நுழைவு வாயில் அருகே சுமார் 50 பேர் அமரக்கூடிய காத்திருப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.கோவை மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 2000-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களைச் சந்திக்க வரும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக ஷிப்ட் முறையில் நேரம் ஒதுக்கப்படுகிறது. தினசரி 260 கைதிகளை பார்வையாளர்கள் சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஷிப்டிற்கும் அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.இதுவரை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக வரும் பார்வையாளர்கள் காத்திருக்க போதிய வசதிகள் இல்லாததால், மேம்பாலத்தின் கீழும், சாலை ஓரத்திலும் காத்திருக்க வேண்டியிருந்தது. தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்தக் காத்திருப்பு அறையால் பார்வையாளர்கள் சிரமமின்றி காத்திருக்க முடியும்.