பீளமேடு: புகையிலை விற்ற 3 பேர் கைது; போலீசார் அதிரடி

கோவை பீளமேடு ஹோப் கல்லூரி, சித்ரா மற்றும் சேரன் மாநகர் வி.ஐ.பி. நகர் பகுதிகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 3 பேரை பீளமேடு போலீசார் கைது செய்தனர். பீளமேடு ஹோப் கல்லூரி அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை விற்பனை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முகிலன் (21) என்பவர் புகையிலைப் பொருட்கள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டு, அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதேபோல், சித்ரா அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை விற்பனை செய்த செல்வராஜ் (55) என்பவரையும், சேரன் மாநகர் வி.ஐ.பி. நகர் பஸ் நிறுத்தம் அருகே பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த பச்சையம்மாள் (68) என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
