கோவை-அவிநாசி சாலையில் அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் ஸ்ரீதரன் (வயது 20) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று (மார்ச் 16) ஹோப் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது சங்ககிரி பகுதியில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீதரன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஸ்ரீதரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த ஓட்டுனர் ராஜ்குமார் (வயது 44) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.