கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தையும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டையும் கண்டித்து, கோவை மாவட்ட அ.தி.மு.க மகளிர் அணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, போலீசார் சுட்டுப் பிடித்ததாக கூறப்படும் மூவர் உண்மையில் குற்றவாளிகளா என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அடையாளம் காணச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், இந்தச் சம்பவத்தில் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் எவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும், தற்போதைய ஆட்சியில் 4,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார்.