
கோவை: போதை மறுவாழ்வு மையம் அமைக்க கோரி நாம் தமிழர் கட்சி மனு
கோவை மாவட்டம் புலியகுளம் மற்றும் இராமநாதபுரம் பகுதிகளில் அதிகளவில் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுவதால், இளைஞர்கள் மத்தியில் மதுபான பழக்கம் அதிகரித்து சமூகப் பிரச்சினைகள் உருவாகும் அபாயம் நிலவுவதாகக் கூறி, நாம் தமிழர் கட்சியின் தெற்கு தொகுதி வேட்பாளர் பேரறிவாளன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார். அம்மனுவில், அப்பகுதிகளில் அரசு சார்பில் உடனடி போதை மறுவாழ்வு மையங்கள் அமைத்து, மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும், மதுப்பிரியர்களுக்கு நேரடி சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் திட்டங்களை அமல்படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மறுவாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், புலியகுளம் பகுதியை சாராயக்குளம் என்றும், இராமநாதபுரம் பகுதியை சாராயபுரம் என்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என நூதனமாக மனு அளித்துள்ளார்.


































