கோவை: எம்ஜிஆர் மார்க்கெட்டில் தொழிலாளி மீது தாக்குதல்; 3 பேர் கைது

60பார்த்தது
கோவை: எம்ஜிஆர் மார்க்கெட்டில் தொழிலாளி மீது தாக்குதல்; 3 பேர் கைது
கோவை காரமடை அண்ணா வீதியை சேர்ந்தவர் சந்திரபாபு (34). இவர் மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா காலனியில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட்டில் சுமைத் தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது அப்பாஸ் என்பவரை கொலை செய்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இதனால் அப்பாசின் தம்பி பாஷாவிற்கு, சந்திரபாபுவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் எம்ஜிஆர் மார்ககெட்டிற்கு வந்த பாஷா மீண்டும் சந்திரபாபுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இதில் ஆத்திரம் அடைந்த பாஷா அங்கிருந்து சென்று தனது நண்பர்கள் 2 பேரை அழைத்து வந்து சந்திரபாபுவை தகாத வார்த்தைகளால் திட்டி கல் மற்றும் கைகளால் சரமாரியாக தாக்கினார். பலத்த காயம் அடைந்த சந்திரபாபுவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இதுகுறித்து சந்திரபாபு சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரபாபுவை தாக்கிய வடகோவை அம்பேத்கார் வீதியை சேர்ந்த பாஷா (24), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த இப்ராகிம் (24) மற்றும் வடகோவை பி அண்டு டி காலனியை சேர்ந்த தென்னிலவன் (23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.