கோவை மாநகராட்சி 2026–2027 ஆம் ஆண்டிற்கான வரவு–செலவு திட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் மொத்த வருவாய் மற்றும் மூலதன வரவினம் ரூ. 4, 915. 50 கோடியாகவும், செலவினம் ரூ. 5, 041. 71 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரூ. 126. 21 கோடி நிகர பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்காவில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியானது. இருப்பினும், இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு புதிய பயன் எதுவும் இல்லை என்றும், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களையே மீண்டும் கூறியுள்ளனர் என்றும் அதிமுக உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்தனர். ஸ்மார்ட் கிளாஸ், பெண்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை போன்ற திட்டங்களில் முன்னேற்றம் இல்லை என்றும் விமர்சித்தனர்.